பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட, இந்த வார ஆனந்த விகடன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜனவரி 1 2012 ல் கணியம் மின்னிதழ் Kaniyam.com பிறந்தது. பலரது பங்களிப்புகளால் இனிதே வளர்ந்து வருகிறது. கணினி நுட்பங்களை தமிழில் வழங்கும் ஒரே மின்னிதழாக கணியம் உள்ளது. 1100 பதிவுகள், 15 கணினி மின்னூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2013 ல் பல துறை மின்னூல்களை வெளியிடும் தளமாக FreeTamilEbooks.com பிறந்தது. 650+ மின்னூல்கள், பல நூறு எழுத்தாளர்கள், பல்லாயிரம் வாசகர்கள், 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், பல பங்களிப்பாளர்கள், ஆன்டிராய்டு செயலி என தமிழின் தனிப்பெரும் திட்டமாக வளர்ந்து வருகிறது. எழுத்தாளர்களை அணுகி, படைப்புகளைப் பெறுதல், மின்னூலாக மாற்றுதல், அட்டைப்படம் உருவாக்கம், மின்னூல் வெளியிடல் என அனைத்துப் பணிகளும் தன்னார்வலர்களின் பங்களிப்புகளால் நடைபெற்று வருகிறது.
2018 ல் கணியம் அறக்கட்டளை Kaiyam.com/foundation உருவானது. இதன் மூலம் பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம், பயிற்சிப் பட்டறைகள், நிரல் திருவிழாக்கள் சாத்தியமாயின. பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி விளக்கிப்பட்டது. கோவை ஞானி, எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரது அனைத்து படைப்புகளும், தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் (1000+), யாவரும் பகிரும் வகையிலாக கிரியேட்டிவ் காமன்சு CC-BY-SA உரிமையில் வெளியிட அனுமதி பெறப்பட்டுள்ளன.
சங்க இலக்கிய மின்னூல்களுக்காக ஒரு வலைத்தளம் – http://sangaelakkiyam.org மற்றும் ஒரு ஆன்டிராய்டு செயலி ஆகியவை வெளியிடப்பட்டன.
விக்கிமூலம் தளத்தில், கணியம் திட்டப்பணி மூலம் 149 மின்னூல்கள் பிழைநீக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஒலிபீடியா திட்டம் மூலம் மின்னூல்கள் ஒலிக்கோப்புகளாக வெளியிடப்படுகின்றன.
தமிழுக்கான மென்பொருட்கள் பலவும் கட்டற்ற உரிமத்துடன் மூல நிரலுடன் வெளியிடப்பட்டன. எழுத்துணரி (OCR – Optical Character Recognition), உரை ஒலி மாற்றி (TTS – Text-To-Speech),சந்திப் பிழைத்திருத்தி , எழுத்துப்பிழைத்திருத்தி ஆகியவை குறிப்பிட்த்தக்கவை. 35 இலட்சம் தமிழ் சொற்கள் கொண்ட சொற்குவியல் , 1.9 இலட்சம் பெயர்ச்சொற்கள் தொகுப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. இவை தமிழ் NLP வளர்ச்சிக்கு உதவி புரிபவை.
இதுவரை பலநூறு புரவலர்கள் 6.5 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். மேற்கண்ட திட்டப்பணிகளுக்கு இந்த நன்கொடைகள் பேருதவி புரிந்துள்ளன. நன்கொடைகள், செலவுகள் வெளிப்படையானவை. இங்கே காண்க – https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit#gid=0
திட்டங்கள், மென்பொருட்களை இங்கே காணலாம் – https://github.com/kaniyamfoundation
இவை யாவும் பல நூறு தன்னார்வலர்களால் சாத்தியமாயின. அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
இதை அனைத்து தன்னார்வலரகள், எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள், நிரலர்களுக்கு சமரப்பிக்கிறோம். நம் அனைவருக்குமான விருது இது. தமிழுக்கு உலகெங்கும் இருந்து பல்வேறு வகைகளில் தனியாகவும், குழுவாகவும், அமைப்புகளாகவும், நிறுவனங்களாகவும், அரசாகவும் பங்களிக்கும் அனைவருக்குமானது இவ்விருது.
இன்னும் ஆர்வத்துடன் உழைக்கும் வேண்டுகோளாகவும், கட்டளையாகவும் இவ்விருதை உணர்கிறோம். ஊர் கூடித் தேர் இழுக்கும் இப்பணிகளில் பங்கு கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
மென்பொருட்கள், மின்னூல்கள் ஆகியவற்றை கட்டற்ற வகையில் மனிதர் அனைவரும் பெற, ஆதரவும் பங்களிப்பும் தரும் பின்வரும் அமைப்புகளுக்கு பல்லாயிரம் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
கணியம் அறக்கட்டளை நண்பர்கள்